Tuesday, October 2, 2012

காந்தி இன்றும் தேவைப்படுகிறார்
இன்றைய இந்தியாவில் காந்தி, காந்தியிஸம் என்று ஏதாவது எஞ்சியிருக்கிறதா?
இந்தியாவைப் பொறுத்தவரையில் அரசியலுக்கு வெளியில் காந்திய மரபு இருக்கத்தான் செய்கிறது.
தொழில் துறை வளர்ச்சியால் ஏற்படும் அத்துமீறல்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் தீவிரமான சுற்றுச் சூழல் அமைப்பு உருவாகியிருக்கிறது.
மரபுசாரா எரிசக்தியையும் சிறிய அளவிலான பாசனத் திட்டங்களையும் இந்த இயக்கங்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்கின்றன. இந்தச் சுற்றுச் சூழலியலாளர்கள் தங்கள் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் இரண்டாம் தேதியன்று தொடங்குகின்றனர் அல்லது முடிக்கின்றனர்.
பெண்ணிய, மனித உரிமை வட்டாரங்களிலும் காந்தியின் தாக்கம் இருக்கிறது. இடதுசாரி அரசியல் சிந்தனைகளிலிருந்து பெற்ற உத்வேகத்துடன் காந்தியின் தாக்கமும் இவர்களுக்கு இருக்கிறது.
மருத்துவர்களும் ஆசிரியர்களும் தங்கள் நகர்ப்புற வீடுகளை விட்டுவிட்டுக் கிராமப்புறங்களுக்குச் சென்று பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் நடத்துகிறார்கள்.
இன்றைய உலகில் காந்தியிடமிருந்தும் காந்தியின் கொள்கைகளிலிருந்தும் நாம் எவற்றையெல்லாம் பின்பற்ற முடியும்?

நான்கு விஷயங்களில் காந்தியின் சிந்தனைக்கு இன்னும் முக்கியத்துவம் இருக்கிறது.
முதலாவதாக, சுற்றுச்சூழல். சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எழுச்சி இதுவரை அடக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு (காந்திய) கேள்வியை நம்முன் நிறுத்துகிறது. அதாவது, ஒரு மனிதன் எவ்வளவு நுகரலாம்? நவீன வாழ்க்கைமுறையை மேலை நாடுகள் மட்டும் பின்பற்றிக்கொண்டிருந்த வரையில் இந்தக் கேள்வி எழவில்லை. பெரும்பாலான அமெரிக்கர்களையும் ஆங்கிலேயர்களையும்போல இந்தியர்களும் சீனர்களும் தங்களுக்கென ஒரு காரை வைத்துக்கொள்ள ஆரம்பித்தால் பூமி அந்தச் சுமையைத் தாங்காது. 1928லேயே மேலைநாட்டு முறையிலான உற்பத்தியையும் நுகர்வையும் உலக அளவில் தாங்க முடியாது என்பதைப் பற்றி எச்சரித்தார் காந்தி.
இரண்டாவதாக, கடவுள் நம்பிக்கை. கடவுளே இருக்கக் கூடாது என்று சொல்லும் மதச்சார்பற்றவர்களும் சரி, தங்களின் கடவுள்தான் ஒரே உண்மையான கடவுள் என்று நினைக்கும் மதவாதிகளும் சரி, காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். இதுதான் உண்மை என்று எந்த மதத்தையும் சொல்ல முடியாது என்று நம்பினார் காந்தி. ஒருவர் தான் பிறந்த மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் (எனவே, மதமாற்றத்தை அவர் ஏற்கவில்லை). ஆனால், அம்மதத்தை அவர் மிகவும் பரந்த மனத்துடனும் அஹிம்சை முறையிலும் அணுக வேண்டும் என்று வாதிட்டார் காந்தி. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருப்பதை அவர் வெகுவாக ஊக்குவித்தார். அவருடைய மிகச் சிறந்த நண்பராக இருந்த சி.எஃப். ஆண்ட்ரூஸ்கூட ஒரு கிறிஸ்தவப் பாதிரியார்தான். அவரது ஆசிரமத்தில் தினமும் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெவ்வேறு மதப் புத்தகங்களிலிருந்து வாசகங்கள் வாசிக்கப்படும் அல்லது பாடல்கள் பாடப்படும். அந்தக் காலகட்டத்தில் அவரது நடவடிக்கைகள் விநோதமாகப் பார்க்கப்பட்டன. இப்போது திரும்பிப் பார்க்கையில் அது முன் உணர்ந்த நடவடிக்கையாகவே தோன்றுகிறது. மதரீதியான மோதல்கள் உலகம் முழுவதும் இருக்கும் நிலையில், இம்மாதிரி நடவடிக்கைகள் பரஸ்பர அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெற உதவும்.
மூன்றாவது, சத்தியாகிரகம். அஹிம்சையின் மூலம் அடையப்பட்ட சமூக மாற்றம் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பதை எல்லோரும் தற்போது உணர்ந்திருக்கிறார்கள். ஃப்ரீடம் ஹவுஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜனநாயக ஆட்சி முறைக்கு மாறிய 60 நாடுகளைப் பற்றி ஆராய்ந்தார்கள். "பரந்த, அகிம்சை முறையிலான புறக்கணிப்பு, பெரும் எதிர்ப்புப் பேரணிகள், வேலை நிறுத்தங்கள், ஒத்துழையாமை போன்ற குடிமக்களின் எதிர்ப்புகள்தான் சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆதரவுத் தளத்தையும் அவர்களது ராணுவத்தின் விசுவாசத்தையும் தகர்த்தன." என்று அவர்கள் கண்டறிந்தனர். இந்த வழிமுறைகள் எல்லாமே காந்தியால் முதலில் பயன்படுத்தப்பட்டவை.
நான்காவதாக, பொது வாழ்க்கை. "ஒரு அரசியல்வாதியாக மட்டுமே அவரை அணுகி மற்ற முன்னணி அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டால் அவர் எவ்வளவு சுகந்தமான வாசனையை விட்டுச்சென்றிருக்கிறார்" என்று தன்னுடைய ரிஃப்ளக்ஷன்ஸ் ஆன் காந்தி (Reflection on Gandhi) நூலில் குறிப்பிட்டார் ஜார்ஜ் ஆர்வெல். பயங்கரவாதம் தலைவிரித்தாடும் இந்தக் காலகட்டத்தில் அரசியல்வாதிகள் காந்தியைப் போல வெளிப்படையான ஒரு வாழ்வை வாழ முடியாது. அவரது ஆசிரமத்திற்கு வெளியில் பாதுகாவலர்கள் யாரும் கிடையாது. எந்த நாட்டையும் தொழிலையும் சேர்ந்தவர்களாக இருந்தாலும் என்ன நிலையில் இருந்தாலும் அவர்கள் விரும்பிய நேரத்தில் ஆசிரமத்திற்குள் செல்லலாம். இன்றைய அரசியல்வாதிகளும் (சமூகப் போராளிகளும்) காந்தியின் ஒளிவுமறைவு இன்மையைக் கடைபிடிக்க முயற்சியாவது செய்யலாம். ஒத்துழையாமைப் போராட்டம் என்றால் அது பற்றி முன்பே அறிவித்துவிடுவார். தன்னுடைய சமூகப் பரிசோதனைகளைப் பற்றித் தன்னுடைய நாளிதழில் விரிவாக விளக்குவார். அருகிலேயே அவரது விமர்சகர்களின் கருத்துகளும் இடம்பெற்றிருக்கும்.  
 

No comments:

Post a Comment