Sunday, January 13, 2013


மார்கழிப் பெண் விடை பெற்று, தை மகளை வரவேற்கும் திருவிழாதான் பொங்கல்திருவிழா..
மார்கழி மாதத்தின் கடைசி நாளைத்தான் போகிப் பண்டிகையாக கொண்டாடுகிறோம். இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும். இது நாளடைவில் மருவி போகி என்றாகி விட்டது.
பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழியே போகியின் தத்துவம். வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தி, வீட்டை சுத்தப்படுத்தி அசுத்தங்களை போக்குவதால் அது போக்கிப் பண்டிகைஎன்றழைக்கப்படுகிறது.
அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தாத்பர்யமாகும்.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனியகாட்சியாகும்.
வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு வாசலில் மாவிலை கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர். அது மட்டுமில்லாது, வீடுகளிலும் அரிசிக்கோலம், பெயிண்டுகளால் கோலமிட்டு அழகுபடுத்துவது தமிழர் பண்பாடு.

பொங்கல்பண்டிகை:
தை முதல் நாளன்று தைப் பொங்கல் அல்லது பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும்.
வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.
பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.
உழவர்கள் இந்தப் பண்டிகையை சிற்பாக கொண்டாடுவார்கள். வருடம் முழுவதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் பகலவனுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு. தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்றநம்பிக்கையோடு இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment